கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்தில் அரங்கேறிய சாதிய தீண்டாமை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சமூக நீதி மற்றும் மனிதநேயத்துறை அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள அண்ணாநகர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தங்களது அன்றாடப் பயணங்களுக்கு 21-ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்தையே முழுமையாக நம்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அண்ணாநகர் பகுதிக்குள் பேருந்தை முறையாக இயக்காமல் ஓட்டுநரும், நடத்துநரும் புறக்கணிப்பதாகவும், பட்டியலின மக்களை பேருந்தில் ஏற்றுவதில் சாதிய தீண்டாமை காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அமைச்சர் வன்னி அரசு காட்டம்
இந்த விவகாரம் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
“மக்களாட்சியில் சாதியின் பெயரால் அரசுப் பேருந்துகளில் சாமானிய மக்களைப் புறக்கணிப்பதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது” என்று அமைச்சர் வன்னி அரசு கடுமையாக எச்சரித்தார்.

மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாருக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில், “தொண்டாமுத்தூர் கெம்பனூர் அடுத்த அண்ணாநகர் பகுதிக்கு, 21-ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்து எவ்வித தங்குதடையுமின்றி உடனடியாக இயக்கப்பட வேண்டும்.
பேருந்து நிறுத்தங்களில் வரும் அனைத்து மக்களையும் எவ்வித பாகுபாடுமின்றி சமமாக நடத்த வேண்டும்.
இனிவரும் காலங்களில் இப்பகுதியில் எவ்வித சாதிய தீண்டாமை புகார்களும் எழாத வண்ணம் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
