முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு தான் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருந்தாலும் எதிர்க்கட்சித்தலைவர் முதல் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரைப்படத் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என ஒரு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சர்ச்சைக்கு நடிகர் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் பட அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்று திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் படம் குறித்து கேள்வி எழுப்பினர். நல்ல கமர்ஷியல் படம், பொழுது போக்கு படம் என உற்சாகமாத தெரிவித்தவரிடம், முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தீர்களான கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நான் பேசியாச்சி என்று கூறி கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
