அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சபரீசன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருகனும், அரசியல் ஆலோசகருமான சபரீசனுக்கு எதிராக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரீசன் சார்பில் அமைச்சர்கள் இருவருக்கும் வக்கீர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் தன் மீதும் அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்று சபரீசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய, உண்மைக்கு புறமான கருத்துகளை இரண்டு அமைச்சர்களும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவதூறு கருத்துகள் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு அமைச்சர்களும் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும்; வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் அவதூறு கருத்துகளை வெளியிட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், இரு அமைச்சர்களும் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று சபரீசன் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
