பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்கு தவெக துணைபோவதாக, திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூகநீதி வரலாற்றில், ஒருவரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே உரிமைகள் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இஸ்லாமியர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் அந்த போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான்.
ஆனால், இன்று தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளாலும், சட்ட ரீதியான அலட்சியத்தாலும் அந்த அடிப்படைத் தகர்க்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்துக்கு மதம் மாறிய நபர், பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கில், இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும் அரசாணையை மதுரை கிளை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூகநீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கையும் பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்குத் துணைபோகிறதோ என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இப்போது ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பின் விளைவாக, மதம் மாறினால் இட ஒதுக்கீடு பறிப்பு என்ற தண்டனை என்ற அச்சுறுத்தலின் மூலம், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தைப் பறிக்கும் பாஜகவின் மறைமுக மதமாற்ற தடைச்சட்டத் திட்டத்திற்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது என்பது தெளிவாகிறது எனவும்,
அந்த அஜெண்டாக்களுக்கு இணக்கமான முதலமைச்சரின் அரசு, இணக்கமான சட்டத்துறை அமைச்சர் என தவெக அரசு பாஜகவுடன் பேணும் இணக்கம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது வந்திருக்கிற நெருக்கடியிலும், திராவிட முன்னேற்ற கழகம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வழி நின்று நம் உரிமைகளை தாரைவார்க்கும் தவெக அரசின் கள்ளத்தனமான கூட்டணியையும் அம்பலப்படுத்தி, சமூகநீதியை நிலைநாட்டி. உரிமைகளை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
