சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், விதிகளை பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளின் உதவியாளர்களாக 17 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக, சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் அமர்வு, உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள், நூலகர்கள் தட்டச்சர்கள், பதிவாளர்களின் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விதிகளின்படி, உரிய தகுதியை பெறாத நிலையில் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள், உரிய தகுதியைப் பெறுவதற்காக 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, 17 பேரின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டு, திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டும், சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதால், விதிகளை பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்வு நடைமுறைகளில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களை மட்டும் பங்கேற்க அனுமதித்ததன் மூலம், பிற தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் தவறான செய்தியை கொண்டு சேர்த்து விடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால், நேரடி தேர்வு முறையை பின்பற்ற வேண்டும் என்ற விதியை மீறி, தேவையில்லாமல் விதிகளை தளர்த்தியுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
