போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ 23 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் ஆதரவாளர் என்று கூறப்படும் இளஞ்செழியன் என்பவரை கைது செய்தனர் .
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் சிவகங்கரனுக்கு மோசடியில் தொடர்பு உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சிவசங்கரனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
போலீசார் சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் இன்று காலை 10 மணியளவில் வேப்பேரியில் உள்ள சென்னை மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஞான சித்ரா தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் , அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கில் இளஞ்செழியன் என்பவர் கைதாகி அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் விசாரணைக்கு ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இளஞ்செழியன் எனக்கு உதவியாளராக பணி புரியவில்லை என்றும் இளஞ்செழியனுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் கூறினார்.
கைதான இளஞ்செழியன் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாகவும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பல பேரை ஏமாற்றி ஏமாற்று பேர் வழியாக இருந்துள்ளார் .
தன்னை காப்பாற்றி கொள்வதற்காக இதுபோன்று பொய்யான வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கூறும் உதவி பொறியாளர் வேலைக்கு டி என்பிசி மூலமாக தான் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோன்று பணத்தை பெற்றுகொண்டு ஏதும் செய்து விடமுடியாது.
புகார் அளித்தவர் என்னுடன் அலைபேசியில் பேசியதாக கூறியுள்ளார். அப்படி பேசியிருந்தால் குரல் பரிசோதனை செய்யுங்கள் நான் அதற்கும் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இளஞ்செழியன் கூறிய கருத்துக்களை நான் மறுக்கிறேன், அமைச்சராக இருந்த போது ஒரு நாளைக்கு தினமும் 200 பேர் என்னை சந்திப்பார்கள். மனு கொடுப்பார்கள் அந்த கூட்டத்தில் நின்று போய் இருக்கலாம், தலைமை செயலகத்தில் இது போன்று நடப்பதற்கு எப்படி சாத்தியம் ? என கேள்வி எழுப்பினார்.
என்னிடம் பணம் கொடுத்தாக பொய்யான குற்றச்சாட்டு வைத்துள்ளார் , எனக்கும் இளஞ்செழியன் எந்தவித தொடர்பும் இல்லை அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று சிவசங்கரன் கூறினார்.
மேலும் காவல்துறை வழக்கமான விசாரணை மேற்கொண்டனர், விசாரணை முழுவதும் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினரிடம் மிக தெளிவாக கூறியிருக்கிறேன். எனக்கும் இளஞ்செழியனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர தயாராக இருப்பதாக கூறினார்..
