இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று இந்தியாவுக்கு மாற்றப்பட்ட நபர் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், கடந்த 2015-ம் ஆண்டு இலங்கையில் 720 கிராம் ஹெராயின் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். அந்த நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2016-ம் ஆண்டு ஜாகீர் உசேன் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை 2022-ம் ஆண்டு வரை சிறையில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தனது தந்தை விடுவிக்கப்படாததைக் கண்டித்து, ஜாகீர் உசேனின் மகன் சமீர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் இந்தியாவில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் என்ற சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் ஏன் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அவரைச் சிறையில் வைக்க உத்தரவிட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தது. மேலும், ஜாகீர் உசேனை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும் போது நடந்த இரு நாட்டு அரசு அதிகாரிகளுடனான கடிதப் போக்குவரத்து தொடர்பான விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல், சம்பந்தப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் தொடர்ந்து தாமதம் செய்தன. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர்களுக்கு தலா ரூ. 50,000 என மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர். இந்தத் தொகையை நான்கு வார காலத்திற்குள் உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
