இன்று ஒரே நாளில் தவெக அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினர் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
திமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகைப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, பி. வில்சன், எஸ். ஆஸ்டின் மற்றும் ஐ. பரந்தாமன் ஆகியோர் இன்று தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத கைது, காவல் அழுத்தம் மற்றும் கட்சி தாவலைத் தூண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்.எல்.ஏ.க்களை கட்சி மாற தூண்டுவதற்காக பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நடவடிக்கைகளில் அனுமதியற்ற தனிநபர்கள் பங்கேற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க உடனடி அரசியலமைப்புச் சட்ட ரீதியான தலையீடு, சுயாதீன விசாரணை மற்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஆளுநரிடம் மனு அளித்தது குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், அதிமுகவைச் சேர்ந்த அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ. எஸ். இன்பதுரை ஆகியோர் இன்று தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், எம்.எல்.ஏ.க்களை பணம் மற்றும் பிற சலுகைகள் மூலம் கவரும் முயற்சிகள் (Horse-trading), திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைப்பது மற்றும் மக்களின் தேர்தல் தீர்ப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசியலமைப்புச் சட்ட ரீதியான தலையீடு கோரப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் ரகசிய அரசு ஆலோசனைகளில் தனியார் நபர்கள் பங்கேற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
