அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் பெற்று நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், தற்போது அரசு வழக்கறிஞர்கள் நியமனப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், நியமனங்களில் ஏதேனும் முறைகேடு நடந்தது உறுதியானால், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முழுமையாக விதிமுறைகளின்படியே நடைபெறும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
அமைச்சரோ, தவேகவினரோ தேவையற்ற ஆய்வுகள் எதுவும் செய்யக்கூடாது என முதல்வர் தெரிவித்திருப்பதாகவும்,
முதல்வரின் கரூர் பயணத்தைத் தடுக்க மனுக்கள் தாக்கல் செய்து திமுக சதி செய்து வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். முதல்வர் கரூருக்கு சென்றால் திமுகவுக்கு என்ன பிரச்சனை? ஏன் அவசரமாக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
