தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், இந்த ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றார். புதிய ஊதிய விவரப்படி, உதவி விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வால் ஆண்டுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும் என்றும், மொத்த ஆண்டு ஊதியச் செலவு ரூ.553.72 கோடியாக உயரும். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ESI மருத்துவக் காப்பீட்டு வசதியும் இனி டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதுவரை இந்த குற்றச்சாட்டில் 30 முதல் 40 ஊழியர்கள் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இனி மீண்டும் இதே தவறில் ஈடுபட்டால் பணிநீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய உயர்வுக்காக மதுபான விலை உயர்த்தப்படாது என்றும், டாஸ்மாக் துறையை முழுமையாக சீரமைப்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 21 வயதுக்கு குறைவானவர்களை FL3 உரிமம் பெற்ற பப் உள்ளிட்ட இடங்களில் அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், தற்போதைய ஆட்சியில் புதிய FL2 உரிமங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மறுவாழ்வு மையங்களை வலுப்படுத்தி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் மேலும் தெரிவித்தார்.
