தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் தொடர்பான வழக்கில், தற்போது அமலாக்கத்துறை (ED) நேரடியாகத் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேச முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை தொடர்புடைய 11 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. விசாரணையின் போது, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் ஹவாலா தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், ஹவாலா பரிமாற்றம் நடந்துள்ளதற்கான முகாந்திரங்கள் இருப்பதாலும், அமலாக்கத்துறை தானாகவே களத்தில் இறங்கியுள்ளது.
‘இண்டிகிரேடட் போர்டல்’ வழியாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். வழக்கை முறையாகப் பதிவு செய்து, ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் 50 லட்ச ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தின் ஆதாரம் மற்றும் பரிமாற்றப் பாதை குறித்து அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சென்னை காவல்துறை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையின் வருகை இந்த வழக்கைத் தனித்தன்மை வாய்ந்த பொருளாதாரக் குற்றவியல் வழக்காக மாற்றியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு, காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை என இருமுனை விசாரணையைச் சந்திக்கத் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
