நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 800க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த கில்லாடி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் அரசு பணிகளுக்கான, ஊழியர்கள் முதல் கொண்டு அதிகாரிகள் வரை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் அரசு வேலை ஆசையில் பலர் மோசடி பேர்வழிகளிடம் மாட்டி தங்களது பணத்தை இழந்து வருவது தொடர் சம்பவமாக நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தான், தமிழகத்தின் 32 மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஒரு மோசடி கும்பல் தங்களது கைவரிசையை காட்டியுள்ளது.
நீதிமன்றங்களில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, 800க்கும் ஏற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டதும் தற்பொழுது அவர் தலைமறைவாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை குறி வைத்தே இந்த கும்பல் தங்களது மோசடியை அரங்கேற்றி வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்திலும், நாகேந்திர குமார் தன்னுடைய ஏஜெண்டாக இரண்டு பேரை அங்கு நியமித்து வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து அவர்களிடம் பேசி, நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் தங்களது கல்வி தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பை வாங்கித் தர முடியும் என ஆசை வார்த்தை கூறி அதற்கு குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் எனவும் அதன் பிறகு இரண்டு மாதம் பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் பணி ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து அவர்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் சொன்னதுபோல் உயர்நீதிமன்றத்தில், யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு பணம் கொடுத்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு அளித்துள்ளார்கள். நீதிமன்றத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை இவர்கள் குறிப்பு எடுத்தும் வந்துள்ளனர். இதற்காக மாதம் தோறும் 20 ஆயிரம் வரை அவர்களுக்கு ஊதியமாகவும் கொடுத்துள்ளார்கள். மேலும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Certificate Verification) என அனைத்தையும் உண்மைப் போல நடத்தி, மாவட்ட நீதிமன்றங்களில் பணியில் சேருமாறு ஆணை வழங்கியுள்ளனர்.
ஆனால், மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று விசாரித்த போதுதான் அது முற்றிலும் போலிப் பணி ஆணை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்டோரிடம் கடந்த 2 ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துள்ளது.
ஒவ்வொரு நபரிடமும் தலா 7 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை நாகேந்திர குமாரிடம் தொலைபேசி மற்றும் நேரிலும் சந்தித்து முறையிட்டபோது விரைவில் பணத்தை கொடுத்துவிடுவதாக கூறி காலம் தாழ்த்தி வந்ததாகவும் தற்பொழுது தலைமுறைமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும், மோசடிக் கும்பல் லஞ்சம் கொடுத்துப் புகார்களை முடக்கி வைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோசடியால் ஏராளமான மாணவ-மாணவிகளின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. இந்த மோசடிக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் இன்று திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள நாகேந்திரகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்த மோசடி கும்பல் ஏராளமான இளைஞர்களை காசை வார்த்தை கூறி பணத்தை மோசடி செய்து உள்ளார்கள். இன்று திருப்பத்தூர், தர்மபுரி, தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து நாகேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட்டு உள்ளோம். எங்களைப் போல் இன்னும் ஏராளமானோர் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். தமிழக அரசு இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எங்களது பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
