கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தப் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு தலைமை காவலர் கெஞ்சிப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணை அவரது கணவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், தொடர்ந்து முகேஷ் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தத் தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் முகேஷை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன், இனி பிரச்சினை செய்யக்கூடாது என்று எச்சரித்ததுடன், பின்னர் ரூ.5,000 லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததைத் தொடர்ந்து, தலைமை காவலர் நாகராஜன், முகேஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தரச் சொன்னார். எங்கே இருக்கிறீர்கள்? பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்” என பலமுறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலளித்த முகேஷ், “நான் வெளியூரில் இருக்கிறேன். காலையில் கோவைக்கு சென்று விடுவேன். இப்போது வர முடியாது. பணம் எனக்கு வேண்டாம். இந்தப் பிரச்சினையில் இருந்து எனக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் போதும். காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். திருமணம் ஆகவில்லை என்று கூறித்தான் அந்தப் பெண் என்னிடம் பழகினார். இனிமேல் எந்தப் பிரச்சினைக்கும் வரமாட்டேன்” என்று பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
