ராஜினாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரதகம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் தங்களின் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் சபாநாயகர் இடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் தரப்பிலிருந்து சில விளக்கங்கள் கேட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து பதில் கடிதத்தை வழங்கினர்.
பின்னர் சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கும் தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.
குதிரை பேரத்தின் மூலம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள அவர்கள் மீது கட்சி தடை தாவல் சட்டத்தின் படி 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் இடம் கடிதம் கொடுத்தோம்.
புகார் மனுவின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். நாங்கள் கொடுத்த புகார் மனுவின் மீது சில விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்திருந்தார்.சபாநாயகர் அவர்கள் கேட்ட விளக்கத்திற்கு பதில் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கூறுகையில், இசக்கி சுப்பையா தரப்பில் எம்எல்ஏக்களிடம் பெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக சொன்னார்கள். அது குறித்து எங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம்.எங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள்தான் கட்சியின் கொறடா, சட்டமன்ற குழு தலைவர்களை நியமனம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் சபாநாயகர் இடம் விளக்கம் அளித்துள்ளோம்.
என்ன காரணத்திற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தோம் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. சொந்த காரணத்திற்காக என்றால் என்ன காரணம்?.
சீட்டு வாங்கும்போது அதிமுகவின் மீது அதிருப்தி இல்லை என்றால் தற்போது ஏன் அதிருப்தி. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லை.அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழக வெற்றி கழகத்தில் இணைகின்றனர் என்றனர்.
ஏற்கனவே அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர், தற்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு,
சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார்கள் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம். இப்படியே தொடர்ந்து ராஜினாமா செய்ய விட முடியுமா?
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் சில நாட்கள் தான் இருக்கும். அது பின்னர் சரி ஆகிவிடும். தற்போது நடைபெறுவது பங்காளி சண்டை தான். கட்சியை விட்டுப் போனவர்கள் வருவதும் வராததும் அவரவர் விருப்பம். எல்லா கட்சியிலும் மனக்கசப்பு இருக்கும் என்றார்.
