வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்று (ஜூலை 24) தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமதுவிடம் சமர்ப்பித்தார்.
அதிபர் ஷஹாபுதீன் (76) தனது ராஜினாமா கடிதத்தில், தனக்கு இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் ‘அட்டானாமிக் நியூரோபதி’ உள்ளிட்ட தீவிர உடல்நலப் பாதிப்புகள் உள்ளதாகவும், இதன் காரணமாகத் தன்னால் கடமைகளை நிறைவேற்ற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஷஹாபுதீனின் ராஜினாமா, வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த மே மாதம் லண்டனில் மருத்துவ சிகிச்சைக்காக அதிபர் ஷஹாபுதீன் இருந்தபோது அவருடன் தொலைபேசியில் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தற்போதைய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதன் பின்னரே அவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஷேக் ஹசீனாவுடனான தொலைபேசி உரையாடல் குறித்த செய்திகளை அதிபர் ஷஹாபுதீன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்புகளை கவனிப்பார். அடுத்த 90 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்டு, தற்போதுள்ள புதிய அரசு பொறுப்பேற்ற சூழலில், முந்தைய ஆட்சியின் அடையாளமாகத் தொடர்ந்த ஒரே நபர் அதிபர் ஷஹாபுதீன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த திடீர் ராஜினாமா, வங்கதேசத்தின் அரசியல் மாற்றங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
