எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையை முன்னிறுத்தி, அவரை இன்று காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு, எதிர்க்கட்சிகளைத் தனிப்பட்ட விரோத மனப்பான்மையுடன் அணுகுவது தடுக்கப்பட வேண்டும்; தனிநபர் தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கால அவகாசம் கோரியுள்ள சூழலில், நீதிமன்ற நடைமுறைகளைப் புறந்தள்ளி அவசர அவசரமாக இக்கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
குறிப்பாக, அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது சரியல்ல.
அரசியல் மேடைப் பேச்சுக்களில் வரம்பு மீறல்கள் இருப்பதாகக் கருதினால், சட்டத்திற்குட்பட்டு வழக்குத் தொடுத்து நீதிமன்றம் வாயிலாக எதிர்கொள்வதே முறையான வழிமுறையாகும். அதைத் தவிர்த்து, உடனடி கைது நடவடிக்கையில் இறங்குவது சரியல்ல. எனவே, கைது நடவடிக்கையை கைவிட்டு, எதிர்க்கட்சித் தலைவரை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
