மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டம், பூம் தாலுகாவில் நடைபெற்ற பால் கலப்பட மோசடி குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 2,30,470 கிலோ தரம் குறைந்த பால் பவுடரைப் பயன்படுத்தி, சுமார் 23,04,070 லிட்டர் செயற்கை பால் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 9 கோடியே 21 லட்சத்து 62 ஆயிரத்து 800 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், 100 லிட்டர் தூய பாலில் 10 லிட்டர் செயற்கை பாலைக் கலந்து விற்பனை செய்துள்ளனர். இந்த 10 சதவீத விகிதத்தின் அடிப்படையில், சுமார் 2.3 கோடி லிட்டர் கலப்படப் பால் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பாலில் கொழுப்புச் சத்து இருப்பதைப்போலக் காட்டவும், உண்மையான பால் போலவே மாற்றவும் நிர்மா சோப்புத் தூள், பாமாயில் மற்றும் தரம் குறைந்த ரசாயனப் பொடிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க காவல் ஆய்வாளர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கால்நடைத் தீவனம் விற்பனை என்ற பெயரில் இந்த மோசடி நடைபெற்று வந்துள்ளது. ரசாயனம் கலந்த இந்தப் பாலைத் தொடர்ந்து பருகுவது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான மண்டலத்தைப் பாதிப்பதோடு, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version