மோட்டார் ரேசிங் உலகில் மிக உயரிய மற்றும் உலகப் புகழ்பெற்ற ’24 ஹவர்ஸ் ஆஃப் லெ மான்ஸ்’ (24 Hours of Le Mans) கார் பந்தயத் தொடரில் பங்கேற்க தேர்வாகி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் ‘அஜித்குமார் ரேசிங்’ அணி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய அணி என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் லெ மான்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘சர்க்யூட் டி லா சார்த்தே’ (Circuit de la Sarthe) ஓடுதளத்தில் இந்த பந்தயம் நடைபெறுகிறது. கார் பந்தய உலகிலேயே மிகவும் சவாலான, கடினமான எண்டூரன்ஸ் பந்தயமாக இது கருதப்படுகிறது. இந்த பந்தயம் இடைவிடாமல் தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெறும். இவ்வளவு நீண்ட நேரத்தில், எந்தவொரு காரும் தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது விபத்தோ இல்லாமல், மிக அதிக தூரத்தை கடக்கிறதோ, அந்த அணியே வெற்றியாளராக அறிவிக்கப்படும். வீரர்களின் வேகம் மட்டுமன்றி, காரின் தரம், எரிபொருள் மேலாண்மை மற்றும் ஓட்டுநர்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றைச் சோதிக்கும் மிகக் கடினமான களம் இதுவாகும்.
மோட்டார் ரேசிங் ரசிகர்களால் உலகளவில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பந்தயம், பிரான்ஸ் நாட்டில் இன்று (ஜூன் 14) மாலை 7:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.
நடிகர் அஜித்குமார் சர்வதேச அளவில் மோட்டார் பந்தயங்களில் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்து வரும் நிலையில், தற்போது அவரது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ இந்த உலகளாவிய மேடையில் தடம் பதித்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழக ரசிகர்களுக்கும் பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில் சாதிக்கக் களம் காணும் அஜித்தின் அணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
