அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்புரையாற்றத் தொடங்கிய போது, நூற்றுக்கணக்கான மாணவர்கள் திடீரென வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்டான்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சுந்தர் பிச்சை மேடையில் பேசத் தொடங்கியதும், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர். அவர்கள் கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி, “பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளிப்போம்” என முழக்கமிட்டனர்.
https://x.com/RT_com/status/2066351924522184843?
‘பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் அமைப்பு மற்றும் ‘பாகுபாட்டிற்கு தொழில்நுட்பம் இல்லை’ ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘புராஜெக்ட் நிம்பஸ்’ (Project Nimbus) என்ற கிளவுட்-கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தத்திற்கு எதிராகவே மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். காசா மீது நடந்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த தொழில்நுட்பங்கள் ராணுவ நோக்கங்களுக்காகவும், பாலஸ்தீனியர்களைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
https://x.com/lilyjamali/status/2066269384302272625?
இது குறித்துப் பேசிய மாணவர் அமைப்பு, “பாலஸ்தீனியர்களைக் கொன்று, கண்காணித்து பணம் சம்பாதிப்பது எப்படி என்று ஒரு தொழில்நுட்ப பில்லியனர் எங்களுக்கு வந்து அறிவுரை கூறத் தேவையில்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் இந்த வெளிநடப்பு போராட்டம் குறித்து சுந்தர் பிச்சை தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை. மாறாக, அவர் நேர்மறை எண்ணங்கள் குறித்தும், சென்னையில் இருந்து சிலிக்கான் வேலி வரையிலான தனது சொந்த வாழ்க்கைப்பயணம் குறித்தும் பேசினார்.
“ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்த போது, அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட் வாங்க என் தந்தை தனது ஒரு வருட சம்பளத்தை செலவழித்தார். நான் முதன்முதலில் விமானத்தில் ஏறியது அப்போதுதான்” என்று தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். விழா முடிந்ததும், இந்த போராட்டம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சுந்தர் பிச்சை எந்த பதிலும் அளிக்காமல் கடந்து சென்றார்.
மாணவர்களின் இந்தச் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்திய-அமெரிக்க முதலீட்டாளர் வினோத் கோஸ்லா தனது எக்ஸ் பதிவில், மாணவர்களின் இந்த செயல் பாரபட்சமானது, முட்டாள்தனமானது மற்றும் மிகவும் சுயநலமானது. மனிதகுலத்திற்குப் பேராற்றலைத் தந்த கூகுள் மற்றும் சுந்தர் பிச்சையை எதிர்த்து வெளிநடப்பு செய்வது இவர்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது” என்று என்றார்.
வினோத் கோஸ்லாவின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா, “இஸ்ரேல் காசாவில் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக, ஐடிஎஃப் உடனான கூகுளின் ஒப்பந்தத்தை எதிர்த்துதான் மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தைப் பற்றி உங்கள் கருத்து என்னவாக இருந்தாலும், மாணவர்களின் கருத்து சுதந்திர உரிமையை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவ ராஜீவ் சந்திரசேகர் தனது பதிவில், மாணவர்களின் செயலைக் கண்டித்துள்ள இவர், “ஒரு காரணத்திற்காகப் போராடுவதை முட்டாள்தனமான செயலோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. நீங்கள் தீவிர அறியாமையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று விமர்சித்துள்ளார்.
