தமிழக அரசின் ஆறாவது வேளாண் நிதிநிலை அறிக்கையும், தற்போதைய அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டும், உழவர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.15,167.62 கோடியில் இருந்து ரூ.470.92 கோடி குறைந்து, ரூ.14,696.70 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதால் மொத்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு உயர்ந்ததாகக் கூறப்பட்டாலும், அதை நீக்கிப் பார்த்தால் மொத்த ஒதுக்கீடே ரூ.648 கோடி குறைந்துள்ளது.
மொத்த மாநில பட்ஜெட்டில் குறைந்தது 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 கொள்முதல் விலை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வெறும் ரூ.18 கோடி மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது, நடப்பாண்டில் கொள்முதல் ஊக்கத்தொகை உயராது என்பதற்கான அறிகுறியாகும்.
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.
பயறு மற்றும் எண்ணெய் வித்துச் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படாததால் அந்த இலக்குகள் நடைமுறையில் சாத்தியமற்றதாக மாறும்.
அதே நேரத்தில், அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கான விருதுகளுக்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும் போது அரசு உழவர்களுக்கு பயனளிக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
