தமிழக அரசியலில், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய அரசியல் சூழலில், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள “வி த லீடர்ஸ்” (We The Leaders) இயக்கம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்கம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக வெளியான தகவல்களும், பாஜக நிர்வாகிகள் சிலர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுவதும் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை பின்னால் செல்லும் பாஜகவினர்
கடந்த சில ஆண்டுகளாக தமிழக பாஜகவின் முகமாக அண்ணாமலை செயல்பட்டார். பாரம்பரியமாக குறைந்த வாக்கு வங்கியுடன் இருந்த பாஜகவை சமூக ஊடகங்கள், நேரடி கள அரசியல் மற்றும் தீவிர பிரச்சாரங்கள் மூலம் மாநில அரசியலின் முக்கிய விவாதப் பொருளாக மாற்றியதில் அவரது பங்கு மறுக்க முடியாதது. குறிப்பாக “என் மண் என் மக்கள்” யாத்திரை, முந்தைய திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தொடர் தாக்குதல்கள் மற்றும் தனிப்பட்ட அரசியல் பிராண்டிங் ஆகியவை அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கின.
அதனால்தான் அவர் புதிய இயக்கத்தை தொடங்கியதும், தமிழக அரசியல் வட்டாரத்தில் அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அண்ணாமலையின் இயக்கத்திற்கு பாஜகவிலிருந்து சென்றுள்ளவர்கள் “தெரிந்தோ தெரியாமலோ” சென்றிருக்கலாம் என்றும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பாஜகவுக்கு திரும்பலாம் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில், பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவின் ஆசீர்வாதம் அந்த இயக்கத்திற்கு இல்லை என்றும், பாஜகவினர் வேறு அரசியல் இயக்கங்களில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நயினாரின் இந்த நிலைப்பாடு இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று, அண்ணாமலையின் இயக்கத்தை பாஜக அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லை. இரண்டாவது, அந்த இயக்கம் பாஜக தொண்டர்களிடம் ஒரு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் கட்சிக்குள் இருப்பதை மறுக்க முடியாது.
அப்படியானால் அண்ணாமலையின் புதிய முயற்சியால் அதிகம் பாதிக்கப்படப்போவது யார்?இதில் முதலில் பாதிக்கப்படுவது பாஜகதான். ஏனெனில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர் ஆதரவாளர்களின் பெரும்பகுதி பாஜக பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதனால் குறுகிய காலத்தில் பாஜக அமைப்பில் சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வேறு எந்தெந்த கட்சிகளுக்கு பாதிப்பு?
ஆனால் நீண்ட கால அரசியல் கணக்கில் பார்த்தால், அண்ணாமலையின் தாக்கம் பாஜகவை மட்டும் பாதிக்காது. கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக இடையே மாறி மாறி வாக்களித்த நகர்ப்புற நடுத்தர வர்க்க வாக்காளர்கள், முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் “திராவிட கட்சிகளுக்கு மாற்று” தேடிய வாக்காளர்களை அண்ணாமலை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது.
அதிமுகவுக்கும் இது கவலைக்குரிய விஷயமாக இருக்கலாம். காரணம், அதிமுக தற்போது தலைமுறை மாற்றம், அமைப்பு சீரமைப்பு மற்றும் எதிர்க்கட்சி அரசியலில் தனது இடத்தை உறுதி செய்யும் கட்டத்தில் உள்ளது. அந்த நேரத்தில் மாற்று எதிர்க்கட்சி முகமாக அண்ணாமலை தன்னை நிலைநிறுத்தினால், அதிமுகவின் எதிர்கால வளர்ச்சிக்கு சவால் ஏற்படலாம்.
மறுபுறம், திமுக மற்றும் தவெக உடனடியாக பாதிக்கப்படும் நிலை தற்போது இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் மேலும் சிதறினால், அதனால் மறைமுக அரசியல் பலன் கிடைக்கலாம்.
தற்காலிக பரபரப்பா… மாற்று சக்தியா?
இருப்பினும், கடந்த கால தமிழக அரசியல் வரலாறு ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. பரபரப்பாக தொடங்கப்பட்ட பல இயக்கங்கள் பின்னர் மங்கிப் போயுள்ளன. சமூக ஊடக ஆதரவும், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையும், தொடக்க நிலை ஆதரவுக் கூட்டம் மட்டும் ஒரு அரசியல் அமைப்பை நிலைநிறுத்தாது. மாவட்ட அளவிலான கட்டமைப்பு, உள்ளாட்சி பிரதிநிதிகள், நிதி ஆதாரம் மற்றும் தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகள்தான் ஒரு இயக்கத்தின் வெற்றியை தீர்மானிக்கும்.
எனவே, அண்ணாமலையின் புதிய இயக்கம் தமிழக அரசியலில் தற்காலிக அதிர்வை உருவாக்குமா அல்லது நீண்ட கால மாற்று சக்தியாக உருவெடுக்குமா என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. அண்ணாமலை இன்னும் தமிழக அரசியலின் முக்கிய பேசுபொருளாக இருக்கிறார். அவரது அடுத்த கட்ட நகர்வுகள்தான் அவரது புதிய இயக்கம் யாருக்கும் சேதாரத்தை ஏற்படுத்துமா அல்லது வெறும் ஆரம்ப நிலை பரபரப்புடன் முடிவடைந்துவிடுமா என்பதை தீர்மானிக்கப் போகின்றன.
– பா. முகிலன்
