இந்திய ராணுவம் தனது சீருடை விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்து மரபுகள் மற்றும் அடையாளங்களை முழுமையாக அகற்றி, இந்திய கலாச்சாரம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் “ராணுவ சீருடைகள்-2026” (Army Uniforms-2026) என்ற புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கையேடு, மொத்தம் 174 பக்கங்களைக் கொண்டுள்ளது.
இது குறித்து ராணுவத்தின் அட்ஜூட்டன்ட் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் வி.பி.எஸ். கௌஷிக் கூறுகையில், “பழைய காலனித்துவ கால நடைமுறைகள், ஆபரணங்கள் மற்றும் வார்த்தைகளை படிப்படியாக நீக்கி, தற்கால இந்திய மரபுகளுக்கு ஏற்ப ராணுவ சீருடை விதிகளை மாற்றுவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கை இது” என்று தெரிவித்துள்ளார்.
ராணுவ அதிகாரிகள் முறையான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூடிய கழுத்து உடைய ‘பண்டி’ ஜாக்கெட்டுகளை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் சோபர் (Sober) நிற சேலைகள் அல்லது குர்தா-சல்வாருடன், கணுக்கால் நீள நேர் பேன்ட் மற்றும் துப்பட்டா அணியலாம். (ஸ்லீவ்லெஸ் குர்தாக்கள், பலாஸோ மற்றும் சிகரெட் பேன்ட்டுகளுக்கு அனுமதியில்லை).
ராணுவ அணிவகுப்புகளின் போது, அதனை ஆய்வு செய்யும் அதிகாரிகள் வாள்களை எடுத்துச் செல்வது இனி கட்டாயமில்லை; அது அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என மாற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை நினைவூட்டும் ‘ராயல்’ போன்ற பழமையான வார்த்தைகளை பயன்படுத்துவது ராணுவத்தில் இனி முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. அனைத்து தரப்பு ராணுவ வீரர்களுக்கும் ‘டிரெஸ் 3B’ என்ற புதிய குளிர்கால சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அங்கோலா சட்டை, பேட்டில் ஜாக்கெட் மற்றும் பெரெட் தொப்பி ஆகியவை இடம்பெறும்.
அரசு விழாக்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் அணியப்படும் ‘டிரெஸ் எண் 5 மற்றும் 6’ ஆகியவற்றில் இருந்து ‘செரிமோனியல் பவுச் பெல்ட்கள்’ (Ceremonial Pouch Belts) நீக்கப்பட்டுள்ளன. எனினும், குறிப்பிட்ட சில படைப்பிரிவுகளின் கர்னல் அந்தஸ்து வரையிலான அதிகாரிகள் தங்களின் ரெஜிமென்ட் விழாக்களில் இதை அணிய அனுமதிக்கப்படுவர்.
இந்த புதிய கையேட்டில் ராணுவ வீரர்களின் உடல் தோற்றம் மற்றும் அழகு பராமரிப்பு குறித்த விரிவான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதில், டாட்டூக்கள் மற்றும் பாடி பியர்சிங், தலைமுடி மற்றும் மீசை வைப்பதற்கான முறையான அளவுகள், அழகுசாதனப் பொருட்கள் பயன்பாடு குறித்த தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்தின் கண்ணியம், செயல்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அடிமைத்தனத்தின் எஞ்சிய அடையாளங்களை ஒழிப்பதற்கான மிக முக்கியமான சீர்திருத்தமாக இந்த புதிய சீருடை கையேடு பார்க்கப்படுகிறது.
