தவெக எம்.எல்.ஏ விடம் பேரம்பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கத்தைகத்தையாகப் பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக தன்னிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு அறிமுகமான யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நரேஷ் என்பவரது திருச்சி வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராமல் கத்தை கத்தையாக வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்தப் பணம் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்மனுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
நாளை பீச் ஸ்டேஷனில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அசோக் குமார் உடைய முன் ஜாமின் விசாரணைக்கு வரவுள்ளது. ஆனால், அசோக் குமார் தமிழ்நாட்டிலேயே இல்லை என காவல்துறையின தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு செந்தில்பாலாஜி தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
