கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று பிரம்மாண்டப் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
ஓசூர் தர்கா பகுதியில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திரளாகத் திரண்டு கர்நாடக எல்லையை நோக்கி நடைபயணமாகப் புறப்பட்டனர். பெங்களூரு சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை சென்ற அவர்கள், “கர்நாடகாவில் நுழைவோம்… மேகதாட்டைத் தடுப்போம்!” “மேகதாட்டு அணை கட்டினால் தமிழகம் சுடுகாடாகும்!” என்ற அதிரடி முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏதும் ஏற்படாத வண்ணம் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது சுய அரசியல் ஆதாயத்திற்காகவே பேசி வருகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே இன மோதலைத் தூண்டும் வகையில் பேசி வரும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றார்.
மேலும் பேசிய பி.ஆர். பாண்டியன், “மேகதாட்டு அணை விவகாரத்தின் தீவிரம் குறித்து விவாதிக்க, தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேகதாட்டில் அணை கட்டப்பட்டால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, கர்நாடக விவசாயிகளுக்கும் தான் ஆபத்து என்று குறிப்பிட்ட அவர், இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர் தேக்கத் திறனும் பாதிக்கப்படும் என்றார். காவிரியையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமிழக விவசாயிகளைக் காக்க, மத்திய-மாநில அரசுகள் இந்த திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் நாட்களில் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்றும் விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளன.
