சென்னையில் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலையில் முதல்வர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

]தலைமைச் செயலகத்தில் வழக்கமான அலுவல் பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் விஜய், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் ஆலையையும், அண்மையில் சைதாப்பேட்டை மாணவர் விடுதியையும் ஆய்வு செய்து, மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து திடீரென சென்னை சேத்துப்பட்டுக்கு சென்ற முதல்வர், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். நாளொன்றுக்கு 100 டன் உணவு மற்றும் காய்கறி கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, கோயம்பேடு சந்தை மற்றும் ஹோட்டல்களில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளை பயன்படுத்தி செயல்படுகிறது.

பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் செயல்பட்டு வரும் இந்த ஆலையை சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஆலையின் செயல்பாடுகள், கழிவு மறுசுழற்சி முறை மற்றும் எரிவாயு உற்பத்தி குறித்த விவரங்களை முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முதல்வரின் வருகையை அறிந்த பொதுமக்கள் சேத்துப்பட்டு பகுதியில் சாலையோரம் திரண்டனர். ஆய்வை முடித்து வெளியே வந்த முதல்வர் விஜய், மக்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுமக்களும் உற்சாகமாக கையசைத்து வரவேற்பு அளித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version