சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, போரூர் முதல் பூந்தமல்லி நசரத்பேட்டை வரை நிறைவடைந்துள்ள மெட்ரோ ரயில் பாதையை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, போரூரில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் பயணித்த அவர், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது மெட்ரோ ரயில் நிலையங்கள், பயணிகள் பாதுகாப்பு வசதிகள், நடைமேடைகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

மேலும், பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில்நுட்ப பணிகள் மற்றும் இறுதிக்கட்ட சோதனை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர தேவையான பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதை பயன்பாட்டுக்கு வந்தால், சென்னை நகரின் மேற்குப் பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி மேலும் மேம்படுவதுடன், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் விரைவாகவும் சிரமமின்றியும் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய், மெட்ரோ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முன்னேற்றம், சுரங்கப்பாதை பணிகள் மற்றும் கிண்டி–கத்திப்பாரா சந்திப்பில் 101 அடி உயரத்தில் ‘பேலன்ஸ்டு கேண்டிலீவர்’ தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ மேம்பால கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து, பாதுகாப்பு அம்சங்களையும் நேரில் ஆய்வு செய்தார்.
