கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, பல்லடத்தை அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். பெற்றோர்கள் தேடியும் கிடைக்காததால் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கண்ணம்பாளையம் பெரிய குளத்தில் சிறுமி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருவர் கைது
சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரை சனிக்கிழமை அதிகாலை போலீஸார் கைது செய்தனர். இதில் முதன்மை குற்றவாளியான கார்த்திக், போலீஸாரைக் கண்டு தப்பிக்க முயன்று கட்டிடத்தின் மேலிருந்து குதித்ததில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலை மறியல் – போலீசாருடன் வாக்குவாதம்
சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சூலூர் காவல் நிலையம் முன்பாக திரண்டு திடீர் ‘ரோடு ரோகோ’ (சாலை மறியல்) போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், வழக்கை விரைவாக நடத்தி தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் தீவிரமடைந்ததால் திருச்சி சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பொதுமக்களைக் கலைந்துபோகும்படி அறிவுறுத்தியதால், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

“எங்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு எங்கே?” எனக் கேட்டு உறவினர்கள் போலீஸாரை முற்றுகையிட்டனர். நிலைமை விபரீதமானதை அடுத்து, மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன் மற்றும் எஸ்பி பவன் குமார் ரெட்டி ஆகியோர் நள்ளிரவில் சூலூருக்கு நேரில் வந்து முகாமிட்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக, காலை 5 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. பின்னர், உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் தற்காலிகமாகக் கலைந்து சென்றனர்.

கடுமையான தண்டனைக்கு விஜய் உறுதி
இந்த நிலையில், கொடூர சம்பவம் குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
