கருணை வேலைவாய்ப்பு தொடர்பானவ் விதிமுறைகளை முதலமைச்சர் மீறியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது….
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. விதிமுறைகளை மீறி அரசு வேலை வழங்க முடியாது என்பதையே நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
1992-ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகத் திருவிழாவில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி ஏற்பட்ட கூட்டநெரிசலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை.
கருணை அடிப்படையிலான அரசு வேலை என்பது பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதிமுறை சார்ந்த திட்டமாகும்.
அதற்கென தகுதி, முன்னுரிமை மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல நிபந்தனைகள் உள்ளன.
விதிமுறைகளைப் பின்பற்றாமல், தனிப்பட்ட அரசாணை மூலம் அரசு வேலை வழங்க முயன்றதுதான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது, அந்த நிலைப்பாட்டையே நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
