சென்னை அடையாறில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரை கன்னத்தில் தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி மகள் கயல்விழியிடம், சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது.
இந்த கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் எஸ்பிஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுது காரணமாக செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதால் எஸ்பிஐ வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் இது குறித்து கயல்விழியின் உதவியாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் கட்டிடத்தில் உரிமையாளரான கயல்விழி தற்போது வரை லிஃப்ட் பழுதை சரி செய்யாததால் வங்கி மேலாளர் நேரடியாக கயல்வழியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி கடந்த 20 ஆம் தேதி நேராக வங்கி அலுவலகத்திற்கு வந்து வங்கி மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கயல்விழி வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங்கின் கன்னத்தில் பளார் என அறைவிட்டு தாக்கினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் கடந்த 24 ஆம் தேதி இது குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கயல் விழி மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்நிலையில் கயல்விழியை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சாஸ்திரி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று மதியம் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கயல்விழி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
