கடலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றிற்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் வெங்கடரமணன் நடவடிக்கை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வடலூர் அடுத்த வருவாய் கிராமத்தில் உள்ள நேரடி தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த அவர் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் தொடர்பான விவரங்களை கேட்டிருந்தார்.
அப்பொழுது விவசாயி ஒருவர் மூட்டை ஒன்றிற்கு பட்டியல் எழுத்தர் வேல்முருகன் 50 ரூபாய் பணம் வாங்கியதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் வேல்முருகனை தற்காலிக பணிநீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்ட உணவு வழங்கல் துறை அமைச்சர் தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
