சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு காட்டமாக பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்கை சரியாக கையாளவில்லை என்ற அவரது குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், இதுகுறித்து உரிய சட்ட நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
கர்நாடக அரசு மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கலாம்; ஆனால் அதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்தே திமுக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக ரகுபதி விளக்கமளித்தார். “மேகதாது அணையையே கட்டக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இந்த விவகாரம் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த அவர், “அவருக்கு அரசியல் புதிது. லாட்டரியில் கவனம் செலுத்தியவருக்கு இந்த விவகாரத்தின் சட்ட நுணுக்கங்கள் புரியாது” என்று சாடினார்.

மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் கிடைக்காது என்றும், மாறாக காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்தான் தவெக. முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது ரீல்ஸுக்குத்தான் உதவும். அந்தப் பேச்சுவார்த்தை நீர்த்துப்போகும்.
மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்போம். காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு பெற்றுத் தர சட்டரீதியாக தொடர்ந்து போராட வேண்டும்” என்று மேலும் ரகுபதி தெரிவித்தார்.
