2026 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளநிலையில், தங்களின் கஷ்டத்துக்கு பலன் கிடைத்துள்ளதாக அவரின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதல் 65 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமைத்தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி- தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி பேச்சியம்மாள் தம்பதியின் இளைய மகன்தான் இந்த சாதனை வீரன் ராஜா.
ராஜாவும் அவரது அண்ணன் சுரேஷ்குமாரும் தொடக்கத்தில் கபடி விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வந்தனர். உடற்பயிற்சிக் கூடத்தில் இவர்களின் ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர்கள், இருவரையும் பளுதூக்கும் போட்டிக்குத் தயார்படுத்தினர். பள்ளிக் காலத்திலேயே பளுதூக்குதலில் சிறந்து விளங்கிய ராஜாவுக்கு, மயிலாடுதுறையில் உள்ள தனியார் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. அங்கு பெற்ற தீவிர பயிற்சியால் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து, பெரம்பூர் ரயில்வேயில் வேலையையும் பெற்றார்.
“தாங்கள் கூலி வேலை செய்துதான் மகனைப் படிக்க வைத்துப் பயிற்சிக்கு அனுப்பியதாகவும், நாங்கள் பட்ட கஷ்டத்திற்குச் சரியான பலன் கிடைத்துவிட்டதாகவும், தங்களது மகன் வெள்ளி வென்றது அளவற்ற மகிழ்ச்சி தருவதாகவும் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர் பெற்றோர்.
தம்பியின் தொடர் முயற்சிதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் அடுத்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதே அவனது லட்சியம் என்றும் ராஜாவின் அண்ணனும் பளுதூக்கும் வீரருமான சுரேஷ்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
2018 காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி 6-வது இடத்தைப் பிடித்தார். 2022 காமன்வெல்த்தில் உடல்நலக் குறைவு காரணமாகப் பங்கேற்க முடியாமல் போனது. 2026 காமன்வெல்த்தில் விடாமுயற்சியுடன் பயிற்சி மேற்கொண்டு, 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ராஜா முத்துப்பாண்டி.
2026 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் விஜய் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளநிலையில், தமிழக மக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் தங்களது வாழ்த்துகளைத் கூறி வருகின்றனர்.
