தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கோடை வெயிலின் உச்சகட்ட காலமான கத்திரி வெயில் கடந்த 4 ம் தேதி தொடங்கியநிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த காலத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
