டெல்லியிலிருந்து ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் நோக்கி நேற்று மாலை புறப்பட்ட இண்டிகோ விமானம், கடுமையான வானிலைச் சிக்கல்களை சந்தித்தது. இருந்தாலும், விமானம் பாதிப்பின்றி ஸ்ரீநகரில் தரையிறங்கியது.
டெல்லியில் வானிலையில் திடீர் மாற்றம்:
அடிக்கடி 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாடித்தாடிய டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை வானிலை திடீரெனவே மாறியது. பல பகுதிகளில் ஆலங்கட்டி மழையும், பலத்த காற்றும், தூசி புயலும் ஏற்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்திலும் குழப்பம் ஏற்பட்டது. சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தரையிறங்க வேண்டிய டெல்லி விமான நிலையத்திலிருந்து மாற்றப்பட்டன.
சேதமடைந்த விமானம்:
இண்டிகோ நிறுவனத்தின் 6E 2142 விமானம், நேற்று மாலை 5 மணிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்டது. பயணத்தின்போது கடுமையான வானிலை காரணமாக விமானிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கைகள் எடுத்தனர்.
விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்த போதும், விமானக் குழுவின் திறமையான நடவடிக்கையால் அது மாலை 6:46 மணிக்கு ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தின் முன்பகுதி பீதியை ஏற்படுத்தும் அளவுக்கு சேதமடைந்திருந்தது. ஆலங்கட்டி மழை தாக்கம் காரணமாக இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானச் சேவை குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
புழுதி புயல்:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 7:45 முதல் 8:30 மணி வரையிலான நேரத்தில் தூசி புயல் வீசியது. சஃப்தர்ஜங் பகுதியில் மணிக்கு 79 கி.மீ வேகத்தில் மற்றும் பல்லம் பகுதியில் 72 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை:
டெல்லியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் ஆலங்கட்டி மழையால் மரங்கள், விளம்பர பலகைகள் சாய்ந்தன. கோல் மார்க்கெட், லோடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான ஆனால் குறுகிய ஆலங்கட்டி மழை ஏற்பட்டது. நொய்டாவில், கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் முன்னே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை காணப்பட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து முடங்கியது.
வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்பு:
டெல்லி போலீசார் தெரிவித்த தகவலின்படி, லோடி சாலையில் மூன்று சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற மாற்றுத் திறனாளி ஒருவர், மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார். இது வானிலை வெறித்தனத்தின் கடுமையை உணர்த்துகிறது.
மெட்ரோ சேவைகள் பாதிப்பு:
மோசமான வானிலை காரணமாக டெல்லி மெட்ரோ சேவைகளும் சிக்கல்களை சந்தித்தன. பிங்க் வழித்தடம் சற்று நேரம் பின்னர் இயல்புக்கு திரும்பின. சிவப்பு மற்றும் மஞ்சள் வழித்தடங்களில் சேவை தாமதம் ஏற்பட்டது. கிரேட்டர் நொய்டா மெட்ரோ சேவைகள் மழை மற்றும் புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டன.
