பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தரைவழி மற்றும் துல்லியமான வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 29 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை இரவு, பாகிஸ்தானின் முக்கிய துறைமுக நகரான கராச்சியில் உள்ள “பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ்” எனப்படும் துணை ராணுவப் படையினரின் பிராந்திய தலைமையகத்தை ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டனர். இந்த கொடூரத் தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் காயமடைந்த நிலையில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று பாகிஸ்தான் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்த ‘ஜமாத்-உல்-அஹ்ரார்’ (Jamaat-ul-Ahrar) என்ற பயங்கரவாத குழு பொறுப்பேற்றிருந்தது. இதன் பின்னணியிலேயே ஞாயிற்றுக்கிழமை எல்லையில் இந்த பாரிய ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அமைச்சர் அத்தாவுல்லா தரார் தனது பதிவில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை இரண்டு முக்கிய கட்டங்களாக அரங்கேறியுள்ளது. வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜார் எல்லைப் பகுதியில் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதக் குழுவின் முக்கிய தளபதியான ‘கான் ஃபரோஷ்’ உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஜமாத்-உல்-அஹ்ரார் மற்றும் ஃபித்னா அல்-கவாரிஜ் ஆகிய அமைப்புகளின் முகாம்களைக் குறிவைத்து எல்லையோரப் பகுதிகளில் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், அங்கிருந்த பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021-ல் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. தங்களுக்கு எதிராகச் செயல்படும் டி.டி.பி பயங்கரவாதிகளுக்கு ஆப்கான் தலிபான் அரசு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை காபூல் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் கடுமையான “நேரடிப் போர்” போன்ற சூழல் நிலவி வந்தது. சர்வதேச நாடுகளின் தலையீட்டினாலும், கடந்த ஏப்ரல் மாதம் சீனா நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையினாலும் எல்லையில் தற்காலிக அமைதி திரும்பியிருந்தது. எனினும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பும், தற்போது ஞாயிற்றுக்கிழமையும் பாகிஸ்தான் நடத்தியுள்ள அடுத்தடுத்த எல்லைத் தாக்குதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு மீண்டும் பெரும் விரிசலைச் சந்தித்துள்ளது. இந்த அதிரடித் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ எதிர்வினையும் வரவில்லை.
