நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து வெடித்துள்ள மாணவர் போராட்டங்களுக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கி உள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள வீட்டு செலவின ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளார். அதில், 2014-15 மற்றும் 2025-26 காலகட்டத்தை ஒப்பிடும்போது, குடும்பங்களின் கல்விச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விக் கட்டணம், தனியார் பயிற்சி மற்றும் டியூஷன் கட்டணம், பாடப்புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்பங்கள் பெரும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருவதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் போன்றவை மாணவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்திய உடனடி காரணங்களாக இருந்தாலும், கல்வி மீதான அதிகரித்த பொருளாதாரச் சுமையே மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படை காரணம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் முக்கிய கோரிக்கையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
