திடீர் மாரடைப்பால காலமான இயக்குநர் கே.பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்த் திரையுலகில் இயக்குநராக, நடிகராக கோலோச்சியவர் கே.பாக்யராஜ். திரைக்கதை அமைக்கும் இவரது தனித்துவ பாணியினால், இவர் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்டார்.
அண்மையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைசிறந்த சீடராக இருந்து, அவரால் மிகவும் பாராட்டப்பட்டவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என புகழப்பட்டவர் பாக்யராஜ்.
நேற்று (ஜூன் 27) காலை நடைபயிற்சி சென்றவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பாக்யராஜின் திடீர் மரணம் குடும்பத்தினரையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட திரைத்துறையினர் அனைவரும் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்னும் ஏராளமானோர் வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
திரைத்துறையில் அவர் புரிந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் உடலுக்கு அரசுதரப்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பாக்யராஜின் உடல் இன்று நண்பகல் 12 மணி அளவில் பெசண்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதற்காக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. அவரது மகன் சாந்தனு இறுதிச் சடங்குகளை செய்தார். அவருடன் நடிகர்கள் பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்டோரும் உதவியாக இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பாக்யராஜின் இறுதிப் பயணம் தொடர்ந்தது.

இறுதிப் பயணத்துக்கான வேனில் அவரது உடல் ஏற்றப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது உடல் மீது அன்புடன் பாக்யராஜ் என அவர் கையெழுத்திட்ட காகிதம் வைக்கப்பட்டிருந்தது. அவரது இறுதிப் பயண வாகனத்தின் முகப்பில் பாரதிராஜாவுடன் இணைந்திருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.
இறுதிப் பயணத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் வள்ளுவர்கோட்டம் முதல் பெசன்ட் நகர் வரை நடந்தே வந்தனர்.
பெசன்ட்நகர் மின்மயானம் வந்ததும், கே.பாக்யராஜின் உடலுக்கு காவல்துறையினர் இறுதிச் சடங்கு நிகழ்த்தினர். துப்பாக்கியால் மூன்று ரவுண்டுகள் வானை நோக்கி சுடப்பட்டது. 72 குண்டுகளை போலீசார் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், பாக்யராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல், மின் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருபுறத்தில் இருந்தும் பாய்ந்து வந்த அக்னி ஜூவாலைகளுடன் பாக்யராஜ் உடல் ஐக்கியமானது!
