திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ‘ஜெயின் மெட்டல்ஸ்’ உலோக உருக்கு ஆலையில் இன்று அதிகாலை நேரிட்ட ராட்சத பாய்லர் வெடிப்பு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்த்த பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் தொழிற்சாலையில், வழக்கம்போல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவி ரஞ்சன் (24) என்பவர் உடல் உறுப்புகள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த பூசன் குமார், ஓம் குமார், ரஞ்சித் குமார், சிம்பர் சிங், ராஜா பாபு, ரன்வீர் குமார் மற்றும் பிரின்ஸ் குமார் என மொத்தம் ஏழு பேர் மீட்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலத்த காயமடைந்த ஒருவர், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்புத் துறையினர், ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்தித் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருந்ததென்றால், தொழிற்சாலைக்கு மிகத் தொலைவில் ஒருவரது உடல் உறுப்பு கண்டெடுக்கப்பட்டது. இதனால் இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து முழு வீச்சில் தேடுதல் பணியைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த விபத்து அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version