காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தமிழக–கர்நாடக எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தருமபுரி மண்டல நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் பெங்களூரு நோக்கிச் செல்லும் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. போராட்டம் முடிவடையும் வரை அல்லது புதிய உத்தரவு வரும் வரை தமிழக பேருந்துகள் கர்நாடக மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக–கர்நாடக எல்லையான ஜூஜூவாடி, அத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரு மாநில காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல தமிழக எல்லையைத் தாண்டி இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக பதிவு எண் கொண்ட கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களும் வழக்கம்போல போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பெங்களூரு செல்லும் பயணிகள் கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். மேலும், பயணிகள் நெரிசலை சமாளிக்கும் வகையில், அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் 16 மாநகரப் பேருந்துகளின் சேவையை தேவைக்கேற்ப அதிகரிக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
