திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த அத்தங்கிகாவனூர் கிராமத்தில், வயதான தம்பதியினரைக் குறிவைத்து நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தங்கிகாவனூர் பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான விவசாயி கோபால் நாயுடு. இவருடைய மனைவி கௌசல்யம்மாள் (68). இவர்களது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்குத் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால், இந்த முதிய தம்பதியினர் மட்டும் கிராமத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 

வழக்கம்போல நேற்று இரவும் கோபால் நாயுடுவும், அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மக் கும்பல், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும், பூஜை அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகளையும் திருடியுள்ளனர்.

பீரோ மற்றும் பூஜை அறையைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யம்மாளின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியையும் அந்த கும்பல் பறிக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து விழித்துக்கொண்ட முதிய தம்பதி, பயத்தில் சத்தம்போட்டுக் கூச்சலிட்டுள்ளனர். இவர்களின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். மொத்தமாக 60 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும் கொள்ளை போயுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வெங்கல் காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து வெங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முதியவர்களை அச்சுறுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version