தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான முக்கிய சம்பவங்கள் குறித்து மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆணவக் கொலை விவகாரமாக இருந்தாலும், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை தொடர்பான நீண்டகால பிரச்சினையாக இருந்தாலும், மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் இதுவரை தானாக முன்வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டதா? பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததா? சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதா? என்ற கேள்விகள் எழுவதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தின் தலைவரை தமிழக அரசு இன்னும் ஏன் நியமிக்கவில்லை? இந்த காலதாமதத்திற்கான காரணம் என்ன? ஆணையம் முழுமையான தலைமை இல்லாமல் செயல்படுவது
அதன் திறனை பாதிக்கிறதா? என்பதையும் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் நீலம் பண்பாட்டு மையப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆணையத்தின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் லட்சுமி பிரியா மற்றும் கந்தசாமி ஆகியோர், இந்த முக்கிய விவகாரங்களில் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
ஏன் தானாக முன்வந்து கள ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை? பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அறிக்கை பெறாததற்கான காரணம் என்ன? என்பதற்கு பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நீலம் பண்பாட்டு மையம்,
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள், முக்கியமான மனித உரிமை மற்றும் சமூகநீதி பிரச்சினைகளில் துரிதமாகவும் வெளிப்படையாகவும் செயல்படுவது அவசியம். அதுவே அரசியலமைப்பின் நோக்கத்திற்கும், சமூகநீதியின் அடிப்படைப் பொறுப்பிற்கும் ஏற்புடையதாகும் என அறிவுறுத்தியுள்ளது.
