தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் வதந்தி மட்டுமே என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தவறான தகவல் என்று மறுத்தார்.
“சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் யாரோ பகிரும் தகவல்களை அடிப்படையாக வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கிறார். இதுபோன்ற தவறான தகவல்களால் பொதுமக்களை குழப்பக் கூடாது,” என்று அவர் கூறினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் 11.50 லட்சம் பேருக்கு மூன்று மடங்கு வரை மின் கட்டணம் வந்ததாகவும், தற்போது சுமார் 9 லட்சம் பேருக்கு மட்டுமே அதிக கட்டண விவரங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கமான ஆய்வு (Routine Check-up) மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வதந்தி பரவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் நுகர்வு உயர்ந்து, அதற்கேற்ப கட்டணமும் அதிகரிப்பது இயல்பானது என்றார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிக மின் கட்டணம் வந்ததாகக் கூறப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், இது இரு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்சினை என்பதால் முதலமைச்சர் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு வருவதாக தெரிவித்தார்.
மேகதாது விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுக தேவையின்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் மக்களை குழப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு அதை செயல்படுத்த மறுத்து வருவதாகவும், மேகதாது விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் சில நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கர்நாடகா செல்வாரா, இல்லையா என்பது குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க மறுப்பதையே கர்நாடகா அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
