நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு சார்பில் இன்று (ஜூலை 19) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, அவையின் செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இக்கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
அதேவேளையில், நீட் தேர்வு விவகாரம், ராமர் கோயில் நன்கொடை கையாடல் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள் மற்றும் அண்மைக்கால அரசியல் நகர்வுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தாங்கள் எழுப்ப விரும்பும் கோரிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மழைக்கால கூட்டத்தொடர் காரசார விவாதங்கள் நிறைந்ததாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
