நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், கல்வி முறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
பேரணியை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றபோது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடைகளை மீறி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர். மேலும், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் இணைய சேவையும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுடன் கட்சி பிரதிநிதிகள் சந்தித்து முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா, அல்லது போராட்டம் தொடர்ந்து தீவிரமடையுமா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
