மத்திய அரசு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு காரணமாக, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை தற்பொழுது ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. கடந்த மூன்று மாத கால இடைவெளியில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செல்வப்பெருந்தகை, மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.29 உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி என மக்கள் தவிக்கும் நிலையில் இந்த கூடுதல் சுமை ஏற்றுக்கொள்ள முடியாது. “அச்சே தின்” என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தியுள்ளனர். இந்த அநியாயமான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
