2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலையே தலைகீழாக மாற்றியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலமாக இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தவெக பக்கம் சாய்ந்து, புதிய ஆட்சியில் அமைச்சரவை இடத்தையும் பெற்றது.
இதனால் திமுக – காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிந்த நிலையில், தற்போது காலியாகியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி விவகாரம் மீண்டும் இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் மோதலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
காலியான எம்.பி பதவி
அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்டிருப்பதால், அந்த இடத்தை யாருக்கு வழங்குவது என்பது முழுக்க முழுக்க தவெக தலைமையின் முடிவாக இருந்தது. ஆரம்பத்தில், தவெக தனது முதல் மாநிலங்களவை உறுப்பினரை டெல்லிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அந்த இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கோரிக்கையை ஏற்ற விஜய்
காங்கிரஸ் மேலிடத்தின் தீவிர முயற்சிகள் காரணமாகவே தவெக இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று முதலமைச்சர் விஜயை சந்தித்து, மாநிலங்களவை எம்.பி பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், அக்கோரிக்கையை தவெக ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று விஜயை நேரில் சந்தித்துப் பேசியதும் இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த எம்.பி பதவிக்கு ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரும், காங்கிரஸின் தேசிய தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி மீதான திமுகவின் கசப்பு
2026 தேர்தலுக்கு முன்பே, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் திமுக தலைமை இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட வாக்கு வங்கி, திமுக கூட்டணியின் பலவீனங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து அவர் டெல்லி தலைமையிடம் அளித்த அறிக்கைகள் திமுகவை அதிருப்திக்குள்ளாக்கியதாக கூறப்பட்டது. திமுக ஒதுக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது மாற்று அரசியல் சக்திகளுடன், குறிப்பாக தவெகவுடன் இணைய வேண்டும் என்கிற கருத்தை அவர் வலியுறுத்தியதாக அப்போது தகவல்கள் வெளியானது.
இதன் காரணமாக, தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் பிரவீன் சக்கரவர்த்தியை சேர்க்கக் கூடாது என்று திமுக தலைமை நேரடியாக காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. “தமிழக அரசியலின் யதார்த்தம் தெரியாமல் டெல்லியில் உட்கார்ந்து கூட்டணிக்குக் குடைச்சல் கொடுக்கிறார்” என்ற கோபம் திமுகவிடம் இருந்ததாக கூறப்பட்டது.
திமுகவைச் சீண்டுகிறதா?
அதே நேரத்தில், இந்த புறக்கணிப்புதான் பிரவீன் சக்கரவர்த்தியை தவெக அணிக்கு நெருக்கமாக்கியதாகவும் கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான தவெக, தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் டெல்லி மேலிடத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் – தவெக கூட்டணி உருவாகும் பணியிலும் அவர் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், தற்போது அதே பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இது வெறும் ஒரு எம்.பி. பதவி நியமனம் மட்டுமல்ல; தேர்தலுக்கு முன் திமுகவுடன் மோதலில் ஈடுபட்ட ஒருவருக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கப்படுவது என்ற வகையில் பார்க்கப்படுகிறது. அதனால் தான், இந்த முடிவு திமுகவுக்கு காங்கிரஸ் தரப்பின் மறைமுக பதிலடியாகவும் சீண்டலாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மாநிலங்களவை இட ஒதுக்கீடு மூலம் தவெக – காங்கிரஸ் உறவு மேலும் வலுப்பெறும் நிலையில், திமுகவுடனான பழைய மோதல்களும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
