டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு இப்போது தண்ணீர் விட முடியாது என கர்நாடகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டத்தில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா காணொலி வாயிலாக பங்கேற்றார். தமிழ்நாடு தரப்பில் சுப்ரியா சாகு, சுப்ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
கர்நாடகா தரப்பில் “ஜூன் மாதம் முழுவதும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையே பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து பூஜ்ஜியமாக இருந்தது. ஜூலை மாதத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால், அணைகளில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. பருவமழை மீண்டும் தீவிரமடையும் அறிகுறிகளும் தற்போது இல்லை.”
மேலும், தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு தற்போது பாசனத்துக்காக காவிரி தண்ணீர் தர வாய்ப்பில்லை என பிடிவாதம் காட்டியுள்ளது.
இக்கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்க வேண்டிய நிலுவை நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட குழு, அடுத்த கூட்டத்தை ஜூலை 28-ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு தண்ணீர் திறப்பு இல்லை என காவேரி மேலாண்மை ஆணையம் கைவிரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.; எனவே என்ன செய்யப் போகிறார் முதல்வர் விஜய் எனக் கேள்வி எழுந்துள்ளது.
