நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணியும், தொகுதி வாக்காளர் பொன். பன்னீர்செல்வமும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
வாக்காளர் பொன். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு, அவர் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், அது சட்டப்படி விசாரணைக்கு ஏற்றதா என்ற கேள்வி எழுந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் மனுக்களை மனுதாரரே நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்ட விதி என்றும், வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு நடைமுறைக்கு முரணானது என்றும் குறிப்பிட்டு, அந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுவில், திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால், தேர்தல் வழக்கில் ரகுபதிக்கு சிக்கல் இன்னும் நீடிக்கிறது.
இதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கிலும், சீனிவாச சேதுபதி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் கமலக்கண்ணன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கிலும், சி.வி. சண்முகம் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
