கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் . எஸ்.பி. வேலுமணி, கட்சிப் பொறுப்புகள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதம் குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், “நாங்கள் எழுதிய கடிதத்தில் எங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்தவர்களும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் கட்சியை வளர்க்க பாடுபட்டவர்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அதனால்தான் நானும், அன்பழகனும், தங்கமணியும் எங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தேவையில்லை; சாதாரண உறுப்பினர்களாகவே தொடர்கிறோம் என்று தெரிவித்தோம்” என்றார்.
அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “வழக்கமாக வளர்மதி கூட்டத்திற்கு அழைப்பார். இந்த முறை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அதற்கு முன்பே நாங்கள் கடிதம் கொடுத்திருந்ததால், அந்தக் கூட்டத்திற்கு எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம்” என்று கூறினார்.
‘ஜாம்பவான்கள்’ என்ற தனது கருத்து குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த அவர், “நான் கூறியதன் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டேன்” என்றார்.
மேலும், “அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே நோக்கம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதையே எங்கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்” என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
