கர்நாடக மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, முதல்வர் சித்தராமையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் சித்தராமையா இன்று (மே 28) ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க உள்ளார்.முன்னதாக, மாநில அமைச்சரவை உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சித்தராமையாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ராஜினாமா உறுதி செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸ் சட்டமன்றக் குழுவைக் கூட்டி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.
கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தலைமை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு, காங்கிரஸ் மேலிடத்துடன் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் நிலவும் தலைமை மோதலுக்குத் தீர்வு காண, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். மே 26, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் சுமார் 7 மணி நேரம் நீடித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன.
இதையடுத்து காங்கிரஸ் மேலிடம், சித்தராமையாவை கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி, மாநிலங்களவை உறுப்பினர் மூலம் தேசிய அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
